பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் ஐசியூ சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக வானதி சீனிவாசன் தனது தொகுதியில் தீவிர நடைப்பயணம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். தொடர் பிரசாரம் காரணமாக அவரது வலது காலில் லேசான வீக்கம் மற்றும் தொற்று (Infection) ஏற்பட்டது. இதற்காகக் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அளிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
வானதி சீனிவாசனின் உடல்நிலை தற்போது சீராக உள்ள போதிலும், மருந்து ஒவ்வாமையிலிருந்து முழுமையாக மீள அவருக்குக் குறைந்தது 4 நாட்கள் முழுமையான ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரது அடுத்த சில நாட்களுக்கான தேர்தல் பிரசாரப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கோவை வடக்கு தொகுதியில் இன்றுதீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். வேட்பாளர் இல்லாத நிலையிலும், வாக்கு சேகரிப்புப் பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், நட்சத்திர வேட்பாளர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கோவை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பிரசாரத்திற்குத் திரும்ப வேண்டும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.