பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

 

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராகப் பணியாற்றி வரும் நிதின் நபின், பீகார் மாநிலம் பாங்கிபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் மாநிலங்களவைக்கு (Rajya Sabha) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துள்ளார்.

சட்டப்படி ஒருவர் ஒரே நேரத்தில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக இருக்க முடியாது என்பதால், நிதின் நபின் தனது பாங்கிபூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநில பாஜக தலைவர் சஞ்சய் சரோகி, நிதின் நபினின் ராஜினாமா கடிதத்தை பீகார் சட்டமன்ற சபாநாயகர் பிரேம் குமாரிடம் நேரில் வழங்கினார்.

"நிதின் நபினின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அடுத்தகட்ட நடைமுறைகளுக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனச் சபாநாயகர் பிரேம் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனது ராஜினாமா குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிதின் நபின், "கடந்த 20 ஆண்டுகளாக, எனது மறைந்த தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹா அவர்களால் அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியை மேம்படுத்தத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். இன்று பாங்கிபூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தாலும், கட்சி எனக்கு வழங்கியுள்ள தேசிய அளவிலான புதிய பொறுப்பில் இருந்துகொண்டு பாங்கிபூர் மற்றும் பீகாரின் வளர்ச்சிக்காக எப்போதும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிதின் நபின் பீகார் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு முழுமையாகத் தனது கவனத்தைத் திருப்பியுள்ளதையே இந்த ராஜினாமா காட்டுகிறது. பாஜக தேசியத் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு, பீகாரில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், வரவிருக்கும் தேர்தல்களில் வியூகம் வகுக்கவும் அவர் கூடுதல் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.