அஸ்ஸாமில் பா.ஜ.க. ‘ஹாட்ரிக்’ வெற்றி... ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் ஆட்சி!
அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 101 தொகுதிகளில் வெற்றி பெற்று அபார சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து பா.ஜ.க. ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆட்சியமைக்க 64 இடங்கள் தேவை என்ற நிலையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தற்போதைய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜாலுக்பாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிடிஷா நியோக்கை 89,434 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். அதே சமயம், காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளராகக் கருதப்பட்ட கௌரவ் கோகோய் ஜோர்ஹட் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேவபிரதா சைக்கியாவும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தது காங்கிரஸிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பா.ஜ.க.வின் இந்த இமாலய வெற்றி அம்மாநில அரசியல் களத்தில் அக்கட்சியின் அசைக்க முடியாத பலத்தை நிரூபித்துள்ளது. மாநில அமைச்சர்கள் பியுஷ் ஹசாரிகா, ரனோஜ் பேகு மற்றும் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் தலைவர் அதுல் போரா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.