"பா.ஜ.க-வின் வாஷிங் மெஷின் இப்போது தவெக-விடம் உள்ளது" - இயக்குநர் அமீர்!
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தது ஜனநாயகப் படுகொலை என்று இயக்குநர் அமீர் சாடியுள்ளார்.
"எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்துவிட்டு, மக்கள் பிரதிநிதிகளின் உச்சகட்ட அதிகார மையமான தலைமைச் செயலக வளாகத்திலேயே ஆளுங்கட்சியான தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டது சாதாரணக் குதிரை பேரமல்ல; அது அப்பட்டமான அயோக்கியத்தனம்" என்று அமீர் விளாசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "மத்தியில் பா.ஜ.க அரசு தன் மீது விமர்சனம் உள்ள மாற்றுக்கட்சித் தலைவர்களைத் தன் பக்கம் இழுத்து தூய்மையாக்குவதை 'வாஷிங் மெஷின்' அரசியல் என்று விமர்சிப்போம். தற்பொழுது அதே பா.ஜ.க-வின் வாஷிங் மெஷின் தந்திரத்தைத் தமிழகத்தில் தவெக கையில் எடுத்துள்ளது" என்று மிகக் கடுமையான ஒப்பிட்டு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
"கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணம் சாதாரணமான ஒன்று அல்ல. விழா ஏற்பாடுகளில் நடந்த அலட்சியமே இதற்கு முக்கியக் காரணம். எனவே, தவெக அரசு இந்தச் சம்பவத்தில் உள்ள அரசியல் பின்னணிகளைத் தவிர்த்துவிட்டு, முறையான விசாரணை நடத்தி இதற்கு காரணமான உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.