பகீர்...  பார்வையற்றோர் பள்ளி விடுதி குளியலறையில் மாணவர் சடலமாக மீட்பு!

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளி விடுதிக் குளியலறையில் 18 வயது மாணவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு குளியலறைக்குச் சென்ற அவர், அதன்பின் தனது அறைக்குத் திரும்பவே இல்லை எனத் தெரியவந்துள்ளது. புதன்கிழமை காலை குளியலறையைச் சுத்தம் செய்ய வந்த தூய்மைப் பணியாளர் பார்த்தபோதுதான் மாணவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரக்பூர் லால்டிக்சி பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஸ்பர்ஷ்’ அரசினர் பார்வையற்றோர் சிறுவர் மேல்நிலைப் பள்ளியில் அன்ப் குமார் 2019-ம் ஆண்டு முதல் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். இரு கண்களிலும் பார்வையற்ற இவர், தற்போது 8-ம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வாலியுடன் குளியலறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் அறைக்குத் திரும்பாததால் புதன்கிழமை காலை 10 மணியளவில் குளியலறையைச் சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப் பணியாளர் மாணவர் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்ததும் நகர்ப் பகுதி காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மாணவர் கையில் வாலியுடனும் கழுத்தில் துண்டுடனும் தனியாகச் செல்வது பதிவாகியுள்ளது. மாணவரின் செல்போனைக் கைப்பற்றியுள்ள போலீசார் அழைப்புப் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்வதோடு சக மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மரணம் தற்கொலை கோணத்திலும் பார்க்கப்பட்டாலும் உடற்கூராய்வு முடிவு கிடைத்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.