ரக்க்ஷா பந்தனில் பிளட் மூன்... அரிய சந்திர கிரகணம்... வெறும் கண்களால் பார்க்கலாமா?!
ஆகஸ்ட் 28ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்நிகழ்வின்போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்பட்டு, முழு சந்திர கிரகணத்தைப் போலவே 'பிளட் மூன்' எனப்படும் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.
வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும் என்றும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் பகுதி அளவாகத் தெரியும் என்றும் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வட மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாகக் காண வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி ஆகஸ்ட் 28 அன்று காலை தொடங்கும் இந்த கிரகணம் பகல் நேரத்தில் நிகழ்வதால், இந்தியாவில் இதைக் காண இயலாது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசிபிக் பெருங்கடல் நாடுகளிலும் இந்த கிரகணம் தெரியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.