விசைப்படகுடன் 9 மீனவர்கள் கடற்படையினரால் சிறைபிடிப்பு... பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார் (எ) மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில் சென்ற 9 மீனவர்கள் லட்சத்தீவு கடற்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார் (எ) மிக்கேல்ராஜுக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில் 9 மீனவர்கள் லட்சத்தீவுகள் நோக்கி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கவராத்தி தீவுப் பகுதியில் அந்த விசைப்படகு சென்று கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்ட கடல் பகுதிக்குள் விசைப்படகு நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, கவராத்தி கடற்படையினர் அந்த விசைப்படகைக் கைப்பற்றி அதிரடியாகச் சிறைபிடித்தனர். படகு உரிமையாளர் நட்டார் (எ) மிக்கேல்ராஜ் உள்பட படகிலிருந்த 9 மீனவர்களும் தற்போது கவராத்தி தீவில் கடற்படையினரின் விசாரணைக்காக விசைப்படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்.எல்லை தாண்டி அல்லது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தருவைகுளம் பகுதி கடலோர மக்களிடையே பெரும் கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.