வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைப்பு; 10 பேர் தமிழர்கள்!
வியட்நாம் நாட்டின் பூ குவோக் தீவு அருகே நிகழ்ந்த கோரப் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் உடல்களும், அனைத்து உத்தியோகபூர்வ நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இன்று வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வியட்நாமிற்குச் சுற்றுலாச் சென்ற இந்தியப் பயணிகள் பயணித்த அதிவேகப் படகு ஒன்று பூ குவோக் தீவு அருகே எதிர்பாராத விதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் துயர விபத்தில் மொத்தம் 15 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 2 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் சிக்கிய மற்ற 17 இந்தியப் பயணிகள் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேர் முழுமையாகக் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் நேர்ந்த இந்தத் துயர விபத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது ஆழந்த இரங்கலையும், குடும்பத்தினருக்கான ஆறுதல்களையும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வியட்நாம் பிரதமர் லே மின் ஹுங் அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான தூதரக நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. அனைத்துச் சட்டபூர்வ நடைமுறைகளும் நேற்று இரவுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 15 இந்தியர்களின் உடல்களும் வியட்நாமின் ஹோசிமின் நகரில் இருந்து பிரத்யேக 'வியட்நாம் ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
மும்பை விமான நிலையம் வந்தடையும் உடல்கள், அங்கிருந்து தங்களின் சொந்த மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவிற்குத் தனித்தனி வாகனங்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட உள்ளன இதற்கான ஏற்பாடுகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்துள்ளது.