பெங்களூரில் பரபரப்பு... ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண்கள்; கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை!

 

பெங்களூரில் காலி மனையிலிருந்த மரமொன்றில் நேபாள நாட்டைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு எலகங்கா காவல் எல்லைக்குட்பட்ட ஜக்கூர் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு அருகிலுள்ள காலி நிலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மரத்தில் இரண்டு இளம்பெண்கள் ஒரே சேலையில் தூக்கில் தொங்குவதைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், எலகங்கா போலீசார் விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றினர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த சைஜனா (22) மற்றும் ரீட்டா (23) என்பது தெரியவந்தது. இதில் சைஜனா அம்ருதஹள்ளியிலும், ரீட்டா பிரேசர் டவுனிலும் தங்கி வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேபாளத்திலிருந்து பெங்களூரு வந்து வெறும் 15 நாட்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இரு இளம்பெண்களும் ஒரே சேலையில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாரேனும் அவர்களைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் காவல்துறை சந்தேகிக்கிறது.

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மையான மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.