தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெட்டப்பட்ட உடல் மீட்பு – ஆக்ராவில் பரபரப்பு!

 

சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தை வந்தடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு ட்ராலி சூட்கேஸை ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அந்தச் சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்களைக் கண்டறிய காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த உடல் பாகங்கள் கொண்ட சூட்கேஸை ரயிலுக்குள் வைத்துச் சென்ற நபர் யார்? அந்தப் பை சென்னையிலிருந்து ஏற்றி வரப்பட்டதா அல்லது வழியில் உள்ள ஏதேனும் இடைப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டதா? என்ற கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.