பொலிவியாவில் வெடித்த மக்கள் போராட்டம் - நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த மக்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து, நாட்டின் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும் வன்முறையைக் கட்டுப்படுத்தவும் நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவசரநிலையை அதிபர் ரோட்ரிகோ பாஸ் பிரகடனம் செய்துள்ளார்.
பொலிவியாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசுக்கு எதிரான கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து கடந்த 50 நாட்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்கள் நாட்டின் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை முழுமையாக முடக்கி மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக, அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருட்கள், எரிபொருள் (எரிவாயு, பெட்ரோல்) மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த ஆயிரக்கணக்கான லாரிகள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றன. இதனால் ஒட்டுமொத்த நாடும் கடுமையான தட்டுப்பாட்டால் நிலைகுலைந்தது.
நெடுஞ்சாலை முடக்கத்தை விலக்கிக் கொள்ளக் கோரி அரசு தரப்பில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளும் முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளன. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் ரோட்ரிகோ பாஸ் தேசத்திற்கு ஆற்றிய அவசர உரையில், "நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது" என அறிவித்தார்.
இந்த அவசரநிலைச் சட்டத்தின் கீழ், நாட்டின் முக்கியச் சாலைகளில் போடப்பட்டுள்ள மறியல்களை அகற்றி, நாட்டின் பொது ஒழுங்கை மீட்டெடுக்கப் பொலிவிய ராணுவத்திற்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போர் மற்றும் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் அதிபர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிபரால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், பொலிவியாவின் முக்கிய நகரங்களான லா பாஸ் மற்றும் சான்டா குரூஸ் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ டாங்கிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால், பொலிவியா முழுவதும் உள்நாட்டுப் போர் போன்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது.