மாநிலம் முழுவதும் பல அஞ்சலகங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்... பெரும் பரபரப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இத்தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மிரட்டல் வந்த அனைத்து அஞ்சலகங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பன்ஸ்வாரா உட்பட பல பகுதிகளில் போலீசார் மற்றும் சிஐடி குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டடங்களை காலி செய்து ஆய்வு செய்தனர். அதேபோல் பிகானர் மற்றும் பார்மர் பகுதிகளில் உள்ள முக்கிய அஞ்சலகங்களிலும் முழுமையான சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த காலங்களிலும் நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் புரளிகளாக இருந்ததாக கூறப்படுகிறது. இதே நாளில் ஹரியாணா மாநிலத்தின் குருகிராமில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.