தீபாவளி பண்டிகையால் களைகட்டிய சந்தை… பொம்மிடியில் ஒரே நாளில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த வாரத்தைவிட விற்பனை அதிகரித்ததால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்ட வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், நேற்று நடைபெற்ற சந்தையில் மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கம்பைநல்லூர், கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கொண்டு வந்தனர்.
ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகளவில் திரண்டனர். சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், ஆட்டுக்குட்டிகள் ரூ.3,500 முதல் ரூ.7 ஆயிரம் வரையும் விற்பனையாகின. ஆடுகளின் விலை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை இருந்தது.
கடந்த வாரம் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையான நிலையில், இந்த வாரம் தீபாவளி விற்பனை ரூ.1.25 கோடியை எட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்