பத்திரம் மக்களே... லீவு நாளில் சிக்கிக்காதீங்க... இன்று சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு VIT பகுதியில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 23) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (ஆகஸ்ட் 24): நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட இதர வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசான மழை தொடரும்.

ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தில் இயல்பான அளவான 18 செ.மீ-க்கு பதிலாக 15 செ.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 17 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.