பத்திரம் மக்களே... தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாளை மறுநாள் ஜூன் 12ம் தேதி தமிழகத்தின் 18 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரக் கணக்கீட்டின்படி, கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவாகி சாதனை படைத்துள்ளது.
வருகிற வெள்ளிக்கிழமை நாளை மறுநாள் ஜூன் 12ம் தேதி அன்று மழைப்பொழிவு மேலும் அதிகரித்து, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழைக்கு வாய்ப்பிருந்தாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி, வெப்பத்தின் தாக்கம் மற்றும் அசௌகரியம் நீடிக்க வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை அடுத்த 4 முதல் 5 நாட்களுக்குள் தமிழகத்தின் மீதமுள்ள பகுதிகளுக்கும் சாதகமாக விரிவடையும் என்பதால், அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.