பத்திரம் மக்களே... இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பலத்தக் காற்றுடன் கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வளிமண்டலத்தில் சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இன்று ஜூன் 17ம் தேதி தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் என நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள், இடி மின்னல் உக்கிரமாக இருக்கும் சமயங்களில் திறந்தவெளிகளுக்கோ, மரங்களின் அடியோ அல்லது மின் கம்பங்களுக்கு அருகிலோ நிற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் சாலைகளில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.