பத்திரம் மக்களே... தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பநிலை - இராமநாதபுரத்தில் 105.26°!
கத்திரி வெயில் காலம் முடிந்த பின்னரும் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக நேற்று (ஜூலை 6) ஒரே நாளில் தமிழகத்தின் 11 முக்கிய நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை (சதம்) தாண்டிப் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தினசரி வெப்பநிலை அறிக்கையின்படி, தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நேற்று தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக 105.26°F (40.7°C) வெப்பநிலை பதிவாகி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. கத்திரி வெயில் காலத்தை விட இங்கு வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக உள்ளது.
தொண்டியைத் தொடர்ந்து சென்னை (நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம்), மதுரை, திருச்சி, திருத்தணி, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் அண்டை மாநிலப் பகுதியான புதுச்சேரி உள்ளிட்ட மேலும் 10 இடங்களிலும் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் தற்பொழுது புதிய தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள போதிலும், தரைக்காற்று கடலோரப் பகுதிகளை நோக்கி வீசுவதில் ஏற்பட்டுள்ள திசை மாற்றங்கள் காரணமாகவே இந்தத் திடீர் வெப்பநிலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையின்றிப் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நேரிடையாக வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உட்படப் பல இடங்களில் இரவு நேரங்களிலும் புழுக்கம் அதிகமாக நீடிப்பதால், மின்சாரப் பயன்பாடும் கணிசமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தின் சில உள் மாவட்டங்களில் இதே போன்ற வறண்ட வானிலையும் அதிக வெப்பநிலையும் நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.