பத்திரம் மக்களே... தீபாவளிக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து சிதறியதில் கல்லூரி மாணவர் பலி; 3 பேர் படுகாயம்!
மதுரை அருகே தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வீட்டின் மாடியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில், கல்லூரி மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருடைய மகன் யோகேஷ் (20). இவருடைய நண்பர் மனோஜ் (21). இவர்கள் இருவரும் ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இவர்கள் இருவரும் பட்டாசுகளை வாங்கிவந்து, ஜெயபாரதியின் வீட்டின் மேல் மாடியில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு எதிர்பாராதவிதமாக அந்தப் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறின. இந்த அதிர்வில் வீட்டின் மாடிப் பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த திடீர் வெடி விபத்தில் மாடியில் இருந்த கல்லூரி மாணவர்களான யோகேஷ், மனோஜ் மற்றும் யோகேஷின் தாய் யோகவாணி (45) ஆகிய 3 பேரும் உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்தனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும் கொட்டாம்பட்டி காவல்துறையினரும் விரைந்து வந்து, காயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜ், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். யோகேஷ் மற்றும் அவரது தாய் யோகவாணி ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து மேலூர் வட்டாட்சியர் வசந்த் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், விபத்து நடந்த கருங்காலக்குடி வீட்டிற்கு மேலூர் துணைப்போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் வட்டாட்சியர் வசந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்துக் கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை காலத்தில் நேரிட்ட இந்தச் சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.