பத்திரம் மக்களே... 6 மாவட்டங்களில் கனமழை... 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அவசர வானிலை முன்னறிவிப்பின்படி, கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி.

தொடர் மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பொதுமக்களும், பயணத்தில் இருக்கும் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.