புத்தகம் கொண்டு வரவில்லை ... வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால்  மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!  

 

 

டெல்லி வினோத் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்த 10 வயது சிறுமி ஒருவர், ஆசிரியர் அளித்த தண்டனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பிற்குப் புத்தகம் கொண்டு வரவில்லை எனக் கூறி மாணவியை வெயிலில் நிற்க வைத்ததாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குடும்பத்தினரும் பொதுமக்களும் பள்ளிக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் தேர்வு அல்லது வகுப்பின் போது புத்தகம் கொண்டு வராததற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் அளித்த தண்டனையால் மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முறையான விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.