காதலிப்பதாக ஆசை காட்டி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... உடந்தையாக இருந்த சிறுவனின் தாய், தந்தை கைது!
தேனியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், அதற்கு உடந்தையாக இருந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தையைப் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே வயதைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச் சம்பவத்திற்கு உடந்தையாகச் செயல்பட்டதாகச் சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி காணாமல் போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், திண்டுக்கல்லில் இருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 16 வயது சிறுவனைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.