நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்ற சிறுவன் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு!
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், செல்லமாக வளர்த்த நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்ற 13 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பரிதாபச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டம் நிசா பகுதியைச் சேர்ந்த தீபக் - பார்வதி தம்பதியின் 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகன் ஹர்தீப் பனிகா. கனமழை காரணமாக இவர்களது வீட்டிற்குள் திடீரென வெள்ளநீர் புகுந்துள்ளது. குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த 3 மாத நாய்க்குட்டி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதைப் பார்த்த சிறுவன் ஹர்தீப், யோசிக்காமல் நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்றுள்ளான். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவன் ஹர்தீப் நீரில் அடித்துச் செல்லப்பட்டான். அவனது தந்தை உடனடியாக மகனைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை.
சிறுவன் காப்பாற்ற முயன்ற அந்தச் சிறிய நாய்க்குட்டி அதிர்ஷ்டவசமாக நீந்தி கரை ஒதுங்கி உயிர் தப்பியது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன் ஹர்தீப்பின் உடலைக் கண்டெடுக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செல்லப் பிராணியின் உயிரைக் காப்பாற்ற முயன்று சிறுவன் தனது உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.