சேலத்தை உலுக்கிய 7 மாத கர்ப்பிணி காதலி படுகொலை - காதலன் கைது!

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, திருமணம் செய்ய மறுத்த 7 மாத கர்ப்பிணியைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் எடப்பாடி அடுத்த கோணசமுத்திரத்தைச் சேர்ந்த கோகிலா (23) என்பவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தனக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகக் கூறி அம்மாசி (26) என்பவருக்கு எதிராகச் சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இதன்பிறகு கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் கோகிலாவை திடீரெனக் காணவில்லை என்று கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார். இந்நிலையில் வெள்ளாளபுரத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கோகிலாவின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் காதலன் அம்மாசியைக் கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார்.