ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்!
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் தனது காதலியைப் பறிகொடுத்த இஸ்ரேல் இளைஞர் ஒருவர், காதலியின் கல்லறையிலேயே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெகிழ்ச்சிச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் நெகேவ் பாலைவனப் பகுதியில் நடைபெற்ற சூப்பர் நோவா இசைநிகழ்ச்சியின் போது, ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 370-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற பார் அஸ்ரப் (30) என்ற இளைஞரின் காதலியான லிரோன் பர்டா என்பவரும் ஹமாஸ் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் எல்கனா நகரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
காதலி லிரோன் பர்டாவின் மறைவுக்குப் பிறகு, கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாகப் பார் அஸ்ரப் தீவிர மன அழுத்தத்திலும் உளைச்சலிலும் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், எல்கனா நகரில் உள்ள தனது காதலியின் கல்லறைக்குச் சென்ற பார் அஸ்ரப், அங்கேயே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த இஸ்ரேல் காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபர் 7 தாக்குதலில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்த உறவினர்கள் மற்றும் தம்பதியினர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் இஸ்ரேலில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.