முன்னாள் காதலியைக் கொல்ல காரில் வெடிகுண்டு வைத்த காதலன்; ஓடும் காரில் இருந்து பெண் குதித்த சில நிமிடங்களில் நிகழ்ந்த பயங்கரம்!

 

கர்நாடக மாநிலம் துமகூருவில், பிரிந்து சென்ற முன்னாள் காதலியைக் பழிவாங்க ஓடும் காரில் வைத்துப் படுகொலை செய்யத் திட்டமிட்ட காதலன், தான் விரித்த வெடிகுண்டுச் சதி வலையிலேயே சிக்கிச் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்த திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சமயோசிதமாகக் காரில் இருந்து குதித்ததால் அந்தப் பெண் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த நாகேந்திரா (30) என்பவரும், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வரும் 23 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் நாகேந்திராவை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரா, அப்பெண்ணைப் பழிவாங்கக் கொடூரத் திட்டம் தீட்டியுள்ளார்.

நேற்று அந்தப் பெண் தங்கியிருந்த வாடகை வீட்டிற்குச் சென்ற நாகேந்திரா, அவரை மிரட்டித் தனது காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளார். மகளைக் காணாததால் பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காரில் கடத்திச் செல்லும் போதே, நாகேந்திரா அப்பெண்ணுக்குக் கடுமையான கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

"உன்னைக் கொலை செய்யாமல் விடமாட்டேன், காரில் ஏற்கனவே வெடிகுண்டுவைத்துள்ளேன்" என்று கூறி நாகேந்திரா மிரட்டியுள்ளார். கார் துமகூருவின் ஜோகிஹள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் வெறிச்சோடிய நாகேந்திரா, மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

காரின் பின் இருக்கையில் நடந்த இந்த பயங்கர மோதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் , நிலைமையைக் கட்டுப்படுத்தக் காரை உடனடியாகச் சாலையோரம் நிறுத்தியுள்ளார். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், காயங்களுடன் காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் குதித்துத் தப்பியோடினார். கார் ஓட்டுநரும் காரிலிருந்து கீழே குதித்தார். அவர் காரில் இருந்து குதித்துச் சில நிமிடங்கள் கூட ஆகாத நிலையில், நாகேந்திரா காரில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

இந்த வெடிவிபத்தில், காரின் உள்ளே இருந்த நாகேந்திரா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காதலியை அழிக்க நினைத்தவன், தான் கொண்டு வந்த வெடிகுண்டாலேயே அழிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லம்பெல்லா பிரிவு போலீசார், காயமடைந்த ஓட்டுநரையும், காரில் இருந்து குதித்துக் காயமடைந்த பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நாகேந்திராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓடும் காரில் வெடிகுண்டு வைத்துப் பெண்ணைக் கடத்த முயன்ற சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.