50 ஆண்டு கால திராவிட அரசியலை மாற்றி  மீண்டும்  ஒரு புரட்சி செய்த  விஜய்... மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா?

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்  தற்போதைய முன்னிலை நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 109 தொகுதிகளில் முன்னிலை பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. அதே வேளையில் அதிமுக கூட்டணி 73 இடங்களிலும், ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 52 இடங்களிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளன.

இந்த முடிவுகள் ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைப் பறைசாற்றுகின்றன. திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யை ஆரம்பத்தில் பலரும் விமர்சித்த போதிலும், இன்று அவர் 'நிகழ்கால எம்.ஜி.ஆர்' ஆக உருவெடுத்துள்ளார். 50 ஆண்டுகால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தியை மக்கள் மனதார ஏற்றுக்கொண்டுள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.அடுத்த 5 ஆண்டுகால தமிழ்நாட்டின் அடையாளமாக விஜய் மாறியுள்ள நிலையில், மக்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் எவ்வாறு காப்பாற்றப் போகிறார் என்பதே இப்போது ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் விஜய் தனது அரசியல் சாணக்கியத்தனத்தால் முறியடித்துள்ளார். வேட்பாளர்கள் யாரென்றே தெரியாத நிலையிலும், விஜய்யின் முகத்திற்காகவும் அவரது கட்சியின் 'விசில்' சின்னத்திற்காகவும் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். வயது வித்தியாசம் இன்றி, குறிப்பாகப் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவரைத் தங்களது நம்பிக்கைக்குரிய தலைவராகப் பார்ப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய பிராண்ட் உருவாகியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.