மாணவர்களுக்கு காலை உணவில் போண்டா, தோசை, பூரி... தெலுங்கானாவில் அசத்தல் மெனு!
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு மாநில அரசுகள் காலை உணவுத் திட்டத்தைக் கையில் எடுத்து வருகின்றன. அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி இடைநிலை மாணவர்களுக்குப் போண்டா, தோசை, பூரி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பதார்த்தங்களுடன் கூடிய ஆரோக்கியமான காலை உணவுத் திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
தொடக்க நாள்: தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, வரும் ஜூன் 12-ஆம் தேதியன்று இச்சிறப்புக் காலை உணவுத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் மூலம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் சுமார் 1.92 லட்சம் இடைநிலை மாணவர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.
இம்மாபெரும் மக்கள் நலத் திட்டத்திற்காகத் தெலுங்கானா மாநில அரசு ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் நிதியைத் தனது பட்ஜெட்டில் இருந்து பிரத்தியேகமாகச் செலவிடவுள்ளது. மாணவர்கள் தங்களது காலை உணவை விருப்பத்துடனும் ஆரோக்கியத்துடனும் உட்கொள்ளும் வகையில், சுழற்சி முறையில் வழங்குவதற்கான விரிவான உணவுப் பட்டியலை அம்மாநில அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் போண்டா மற்றும் தோசை, பூரி மற்றும் உப்புமா, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய இட்லி என உணவுகள் இடம்பெற்றுள்ளன
ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்குத் தேவையான சமச்சீர் ஊட்டச்சத்து மற்றும் கலோரி அளவைக் கணக்கிட்டு, இந்த உணவுப் பட்டியல் நிபுணர்களின் ஆலோசனையின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை மதிய உணவுத் திட்டம் மட்டுமே நடைமுறையில் இருந்து வந்தது. காலையில் உணவருந்தாமல் பள்ளிக்கு வரும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய ஏழை மாணவர்களின் கவனச் சிதறலைத் தவிர்க்கவும், ரத்த சோகை போன்ற குறைபாடுகளைக் களையவும் காலை உணவுத் திட்டம் பெரிதும் உதவும் எனக் கல்வித்துறையினர் வரவேற்றுள்ளனர். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தவும், இடைநிற்றலைத் (Dropouts) தடுக்கவும் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் எனத் தெலுங்கானா அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.