காலை உணவுத் திட்டம்.. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர்... பள்ளிகளில் திடீர் ஆய்வு!

 

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் தவெக அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் உணவின் தரம் குறித்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று நேரில் சென்று அதிரடி ஆய்வு நடத்தினார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு தங்கு தடையின்றி, தரமாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அமைச்சர் இன்று காலை முதலே களத்தில் இறங்கினார்.

சென்னை அமைந்தகரை மற்றும் செனாய் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று திடீர் விஜயம் செய்தார். அங்கு மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காலை உணவின் தரத்தை, அவர் அவரே நேரடியாகச் சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அங்கிருந்த பள்ளி மாணவ-மாணவிகளுடன் அன்போடு கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்குத் தனது கைகளால் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தார். மேலும், திட்டத்தின் பலன்கள் குறித்தும், உணவு நன்றாக இருக்கிறதா என்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

காலை உணவுத் திட்டத்தில் எவ்வித தொய்வோ அல்லது புகார்களோ எழக் கூடாது என்பதில் புதிய அரசு தீவிரமாக உள்ளதை உணர்த்தும் வகையில் அமைச்சர் அதிகாரிகளுக்குச் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்:

"பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு என்பது மிகவும் சத்தானது மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. எனவே, உணவிற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் மிகத் தரமானதாகவும், சுவையாகவும், அதே நேரத்தில் சமைக்கும் இடம் மற்றும் பரிமாறும் பாத்திரங்கள் முற்றிலும் சுத்தமாகவும் இருப்பதை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்" என அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.