பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர் விஜய்!
தமிழகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறிய அவர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
முதல் நாளான இன்று மாணவர்களுக்கு வெண் பொங்கல், சாம்பார் மற்றும் சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் விஜயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவனம் பெற்றுள்ளன.இதுவரை 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன் பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.
விரிவாக்கப்பட்ட திட்டம் செப்டம்பர் 22-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. எனினும், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக விலக்கப்பட்டுள்ளன.மாணவர்களின் ஊட்டச்சத்து, பள்ளி வருகை மற்றும் கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.