#BREAKING: அமோனியா வாயு கசிவு... பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
திருவள்ளூர் அருகே பெரியபாளையம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் மோகன் மற்றும் ஜோசப்ஜெகன் ஆகியோருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தத் தொழிற்சாலையில் வழக்கம் போல் சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாகத் தொழிற்சாலையின் குளிரூட்டும் பிரிவில் இருந்து நச்சுத்தன்மை வாய்ந்த "அமோனியா வாயு" கசியத் தொடங்கியது.
வாயு கசிவு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அங்குப் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த விபத்தில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 74 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் நிலைமை மோசமடைந்ததை அடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிழைப்பிற்காக வந்த ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்துப் பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா, அலட்சியம் காரணமாக இந்த விபத்து நேரிட்டதா என்பது குறித்துத் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள தொழிற்சாலை நடத்துநர்களான மோகன் மற்றும் ஜோசப்ஜெகன் ஆகியோரைப் பிடிக்கவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.