BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமினில் வெளிவந்த அஸ்வத்தாமன் பாங்காக்கிற்கு தப்ப முயன்ற போது விமான நிலையத்தில் கைது!
சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்த அஸ்வத்தாமன், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற நிலையில், விமான நிலையத்தில் வைத்து மீண்டும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான அஸ்வத்தாமன், சமீபத்தில் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே வந்தார். ஜாமீன் நிபந்தனைகளின்படி அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஆனால், கடந்த சில நாட்களாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
அஸ்வத்தாமன் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகச் சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இன்று மதியம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரத்திற்குத் தப்பிச் செல்ல அஸ்வத்தாமன் முயன்றார். அப்போது அங்கு மறைந்திருந்த தமிழகத் தனிப்படை போலீசார், அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவர் ஏன் வெளிநாட்டிற்குத் தப்ப முயன்றார்? அவருக்குப் பின்னணியில் யாராவது செயல்படுகிறார்களா? என்பது குறித்து சென்னை கொண்டு வரப்பட்ட பிறகு தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.