#BREAKING: எந்த நிமிடத்திலும் கைது.. செந்தில் பாலாஜி தம்பி அசோக்கையும் தேடும் போலீஸ் - சென்னையில் பரபரப்பு!

 

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இன்று காலை முதலே காவல்துறையினர் சோதனையிலும், விசாரணையிலும் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த வழக்கின் முக்கியக் கண்ணியான அவரது தம்பி அசோக்குமாரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகிய இருவருமே எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மைக் குற்றவாளியாகவும், அவரது தம்பி அசோக்குமார் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ  அமைப்புகள் இவர்களைத் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தன.

நீண்ட நாட்களாக நீதிமன்றக் காவலில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்த சூழலில், தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சென்னை மாநகரக் காவல் துறையினர் இந்த விசாரணையை மீண்டும் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளனர்.

இன்று காலை சென்னை இல்லத்திற்குப் போலீசார் வந்தபோது செந்தில் பாலாஜி அங்கு இல்லை என்பதால், அங்குப் பணியில் இருந்த ஊழியர்களிடம் அசோக்குமாரின் தற்போதைய இருப்பிடம் குறித்தும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்தும் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

நீதிமன்ற வழக்குகளின் கூடுதல் குற்றப்பத்திரிகைகள் மற்றும் புதிய சாட்சியங்களின் அடிப்படையில் இந்தத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அசோக் மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் இருப்பிடங்களையும் ட்ராக் செய்து வரும் போலீசார், அவர்களை எந்த நிமிடத்திலும் கைது செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் எம்.ஆர்.சி நகர் இல்லத்தின் முன்பாகத் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.