#BREAKING: "ஆதாரமற்ற குற்றச்சாட்டு" - விஜய் அரசுக்கு எதிரான குதிரை பேர புகார் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

 

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு ஆட்சி அமைத்ததில் குதிரை பேரம் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கைப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த விசாரணையின் மூலம் தவெக அரசுக்கு எதிரான சட்டப் போராட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, சில கூட்டணிக் கட்சிகளின் வெளியிலிருந்து அளிக்கப்பட்ட ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு தனது பெரும்பான்மையை முறைப்படி நிரூபித்தது.

இருப்பினும், இந்த ஆட்சி அமைப்பின் பின்னணியில் முறைகேடுகளும், குதிரை பேர ஊழல்களும் நடந்துள்ளதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு (PIL) ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து மத்திய புலனாய்வுத் துறைவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரருக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

எந்தவொரு நம்பகமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல், வெறும் ஊகங்கள் மற்றும் தெளிவற்ற தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாத அரசியல் ரீதியான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட எந்தவொரு முகாந்திரமும் இல்லை.

விளம்பர நோக்கிற்காகவோ அல்லது போதிய தரவுகள் இல்லாமலோ தாக்கல் செய்யப்படும் இதுபோன்ற மனுக்களைப் பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி நீதிபதிகள் வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம் தவெக அரசுக்கு எதிரான சட்டச் சிக்கல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதால் தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.