#BREAKING: ஆந்திராவில் பாய்லர் வெடித்து கோர விபத்து - தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் இயங்கி வந்த மருந்தகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர பாய்லர் வெடி விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி முழுமையாகத் தரைமட்டமாகியுள்ளதுடன், படுகாயமடைந்த பல தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதிக்கு அருகிலுள்ள பிரபல ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஒரு மருந்தகத் தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எதிர்பாராதவிதமாகத் தொழிற்சாலையின் பாய்லர் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தின் தாக்கத்தால் தொழிற்சாலையின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உட்பட மொத்தம் 5 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த மேலும் பல தொழிலாளர்களை அருகில் இருந்த சக பணியாளர்களும் மீட்புப் படையினரும் மீட்டுச் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.