#BREAKING: வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில், மாநிலத்தின் மிக நீளமான சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வரும் இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்புகள் மற்றும் பணி நடைபெறும் பகுதியின் மீது திடீரென டன் கணக்கிலான மலைமண் சரிந்து விழுந்தது.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், கேரளா முதலமைச்சர் வி.டி. சதீசன் உத்தரவின் பேரில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். ராட்சத மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில், மண்ணுக்குள் புதையுண்டிருந்த 7 தொழிலாளர்கள் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும், இந்த விபத்தின் கொடூரத்தால் நேற்று முதற்கட்டமாக 3 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, இன்று  மதிய நிலவரப்படி மேலும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மண்ணுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்த நிலச்சரிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மண்ணில் புதையுண்டு இன்னும் கண்டறியப்படாமல் உள்ள எஞ்சிய தொழிலாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதால், நிலச்சரிவு அபாயத்திற்கு மத்தியிலும் மீட்புக் குழுவினர் மோப்ப நாய்கள் மற்றும் நவீன கருவிகளின் உதவியுடன் எஞ்சியவர்களைத் தேடும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.