BREAKING: குஜராத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 8 பேர் பலி, 24 பேர் காயம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, குறைந்தது 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தின் வஸ்திரால் பகுதியில் உள்ள ராமோல் - கத்ராட் சாலையில் அமைந்துள்ள ஒரு பட்டாசு ஆலையிலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளது. இன்று மாலை நேரத்தில் ஆலையில் பணியாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மருந்துகளில் தீப்பொறி பட்டுப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டுப் பதறியடித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக்குழுவினர், நீண்ட நேரம் போராடி ஆலையில் பரவிய தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தின் வீரியம் காரணமாகக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி 24 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான இந்த ஆலையின் உரிமம் ஏற்கனவே அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், விதிகளை மீறி ஒரு விவசாயப் பண்ணைக்குள் இந்த ஆலையைத் ரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் இயக்கி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அலட்சியப் போக்கே இத்தனை உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. சட்டவிரோதமாக ஆலையை நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.