#BREAKING: "ஈரானுடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" - பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!
மறைந்த ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அந்நாட்டில் நடைபெற்று வரும் சூழலில், ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும், போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலில் கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்ட அலி காமேனியின் இறுதி ஊர்வலங்களில், டிரம்பைக் கொலை செய்யப் பகிரங்கமாக அச்சுறுத்தல்களும், பதாகைகளும் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வார்த்தைகளால் ஈரானைச் சாடியுள்ளார்.
ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கேட்கப்பட்ட போது, "என்னைப் பொறுத்தவரை அது முடிந்துவிட்டது. ஈரானியத் தலைமை ஒரு நோயாளி கூட்டமைப்பு , அவர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை" என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவை அடுத்து, ஈரான் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த சிறப்பு வரி விலக்குச் சலுகைகளை அமெரிக்க நிதி அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதற்கு முன்னதாக ஓவல் அலுவலகத்தில் பேசியிருந்த டிரம்ப், "நாம் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் தொடங்கிய வேலையை ராணுவ ரீதியாக முடிப்போம். ஈரானின் முக்கியப் பாலங்கள் மற்றும் எரிசக்தி விநியோகக் கட்டமைப்புகளை ஒரே மணி நேரத்தில் எங்களால் தரைமட்டமாக்க முடியும்" என்று எச்சரித்திருந்தார். தற்போது பேச்சுவார்த்தை முற்றிலுமாக முறிந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளது வளைகுடாப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையேயான தற்காலிகப் போர்நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாக சர்வதேசச் சந்தைகள் கருதுகின்றன. இதன் எதிரொலியாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5.3 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பேரல் 78.09 டாலராக அதிகரித்துள்ளது.
நாளை மஷ்ஹத் நகரில் அலி காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முழுமையாக முறிந்துள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் எந்த நேரத்திலும் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் உலக நாடுகள் உன்னிப்பாக நிலைமையைக் கவனித்து வருகின்றன.