BREAKING: ட்ரம்ப், நெதன்யாகு உட்பட 13 உலகத் தலைவர்களின் 'ஹிட்-லிஸ்ட்' வெளியிட்டது ஈரான்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு மரண எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ நாளிதழ் வெளியிட்டுள்ள 'ஹிட்-லிஸ்ட்' சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வெளியாகும் அந்நாட்டு அரசின் முக்கிய நாளிதழான ‘ஹம்ஷஹ்ரி’, தனது அச்சு மற்றும் இணையப் பதிப்பின் முகப்புப் பக்கத்தில் தகவல் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மரணப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அந்தப் படங்களுடன், "பழிவாங்கல் மிக விரைவில் வருகிறது; இது எங்களது தேசத்தின் விருப்பம், இது நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்ற ஆக்ரோஷ வாசகமும் இடம்பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தபா காமேனி, தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
தந்தையின் இறுதிச்சடங்கிற்குப் பின் அவர் வெளியிட்ட முதல் செய்தியில், "இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட முடியாது; அவர்கள் தங்களது இறுதி நாட்களைக் கல்லறையில்தான் கழிக்க நேரிடும்" என மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் உள்ள மசூதிகளின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு எதிரான 'இரத்தப் பழிவாங்கலின் வெள்ளிக்கிழமைகளாக' மாற்றப்பட்டு, ஜிகாத் முழக்கங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஈரானின் இந்தத் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹர்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல்களை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் தனது ஆக்ரோஷத்தை அதிகரித்துள்ளது. ஈரானின் 140-க்கும் மேற்பட்ட முக்கிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்திக் குண்டுமழை பொழிந்துள்ளன.
"ஈரான் எங்களது தலைவர்களைக் குறிவைக்க முயன்றால், அந்த நாடு முற்றிலும் அழிக்கப்படும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளும் மாறி மாறித் தங்களது இராணுவ பலத்தைக் காட்டி வருவதாலும், உலகத் தலைவர்களின் உயிர்களுக்கு ஈரான் நேரடியாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாலும், வளைகுடாப் பகுதியில் எந்நேரமும் முழு அளவிலான உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் சர்வதேசச் சமூகம் தவித்து வருகிறது.