#BREAKING: கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; இந்திய மாலுமி பலி, 6 இந்தியர்கள் படுகாயம்!

 

அமெரிக்கா - ஈரான் இடையேயான ராணுவ மோதல் வளைகுடாப் பகுதியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய கொடூர ஏவுகணைத் தாக்குதலில், கப்பலில் பணியில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 6 இந்தியர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வளைகுடாப் பகுதியில் கடல்வழி வர்த்தகப் பாதையைக் கைப்பற்றுவதில் நீடித்து வரும் மோதலுக்கு இடையே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக வெளிவிவகார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அவசர அறிக்கையின்படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான 'மொம்பாசா' மற்றும் 'அல் பாஹியா' ஆகிய இரண்டு வணிகச் சரக்குக் கப்பல்களே ஈரானின் இலக்காக மாறியுள்ளன.

இக்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கே அமைந்துள்ள ஓமன் கடல் பகுதி வழியாகக் கடந்து செல்ல முயன்ற போது, ஈரானியப் படைகளால் வீசப்பட்ட 2 ஏவுகணைகள் கப்பல்களைத் துல்லியமாகத் தாக்கின.

ஈரான் நடத்திய இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதலால் இரு கப்பல்களும் தீப்பற்றி எறிந்தன. ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில் 'மொம்பாசா' கப்பலில் பணியில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தாக்குதலில் கப்பலில் இருந்த மேலும் 6 இந்தியர்கள் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 2 மாலுமிகள் என மொத்தம் 8 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் இரண்டு சொகுசுச் சரக்குக் கப்பல்களின் கட்டமைப்புகளும் கடுமையான சேதமடைந்துள்ளன. ஈரானின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு அமீரக வெளிவிவகார அமைச்சகம் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேசக் கடல்வழிச் சட்டங்களை ஈரான் முற்றிலும் மீறி வருவதாகவும், இந்த அராஜகத் தாக்குதலுக்குத் தகுந்த நேரத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முழு உரிமை உள்ளது என்றும் அமீரக அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யாவின் 'டூம்ஸ்டே' விமானம் ஈரானுக்கு ஆதரவாக வந்துள்ள நிலையில், தற்பொழுது இந்தியப் பலியுடன் நிகழ்ந்துள்ள இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்காசியப் பகுதியில் பெரும் உலகப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.