#BREAKING: ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... முன்னாள் வேலைக்காரன் கைவரிசையா?! - டெல்லியில் பயங்கரம்!

 

தெற்கு டெல்லியின் மிக முக்கியமான பகுதியான அமர் காலனியில், மத்திய வருவாய்த்துறை உயரதிகாரியின் மகள் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட இளம்பெண் (22), பொறியியல் முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகி வந்துள்ளார். அவரது பெற்றோர் உடற்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் வீடு திரும்பியபோது, மகள் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் மொபைல் போன் சார்ஜர் ஒயரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் அந்த வீட்டில் ஏற்கனவே வேலை பார்த்துவிட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட ராகுல் மீனா என்ற முன்னாள் வீட்டு வேலைக்காரன் மீது போலீசாருக்குப் பலமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராகுல் மீனா அந்த வீட்டிற்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் வீட்டின் சாவியைப் பதுக்கி வைத்திருந்து, இளம்பெண்ணின் பெற்றோர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது தெரிய வந்துள்ளது.

குற்றவாளி ராகுல் மீனா, கொலையைச் செய்த பிறகு அந்தப் பெண்ணின் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரைப் பிடிக்க டெல்லி போலீசார் தனிப்படை அமைத்து ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர். விஐபி-க்கள் வசிக்கும் பகுதியில் இத்தகைய கொடூரம் நடந்திருப்பது டெல்லிவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.