#BREAKING: ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் ஒருவர் கைது! 

 

மின்வாரியத்தில் டெண்டர் மற்றும் கொள்முதல் முறைகேடுகள் தொடர்பான உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்ட உடனேயே, அதுகுறித்த தரவுகள் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாக எழுந்த புகாரில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மின்வாரியத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தத் திட்டமிட்ட டிஜிட்டல் தரவுத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, பாதுகாப்புத் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி மின்வாரியம் தரப்பில் மட்டும் மொத்தம் 8 தனித்தனிப் புகார்கள் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டுள்ளன.

இந்த 8 புகார்களில், மின்வாரிய உயர் அதிகாரியான மலர்விழி என்பவர் அளித்த குறிப்பிட்ட ஒரு புகாரின் அடிப்படையில் போலீசார் அவசர வழக்குப் பதிவு செய்து தங்களது தீவிர விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக, மின்வாரியத் தலைமையகத்தின் கணினிப் பிரிவு மற்றும் ரகசியத் தரவுகள் கையாளப்படும் அறைகளுக்குச் சென்று வர அனுமதி உள்ள நபர்களின் பட்டியலைச் சேகரித்துப் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மின்வாரியத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவரைப் போலீசார் இன்று மதியம் கைது செய்துள்ளனர்.

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று காலையில் "முறைகேடு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது, உள்ளே இருக்கும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது" என்று எச்சரித்திருந்த நிலையில் இந்த முதற்கட்டக் கைது அரங்கேறியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஒப்பந்த ஊழியரிடம்  ரகசிய இடத்தில் வைத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த கால மின்சாரக் கொள்முதல் மற்றும் நிலக்கரி இறக்குமதி டெண்டர் முறைகேடுகளின் டிஜிட்டல் ஆதாரங்களை அழிப்பதற்காக, மின்வாரியத்தின் உள்ளே இருக்கும் எந்தெந்த அதிகாரிகள் அல்லது அரசியல் பிரமுகர்கள் இவருக்குப் பணம் கொடுத்து இந்தத் திருட்டை அரங்கேற்றச் சொன்னார்கள் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஹார்டு டிஸ்க்குகளை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.