#BREAKING: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. மாணிக்கம் தாகூர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது வரை தமிழக காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து வந்த கே.செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை டெல்லி காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களின் வெளிப்பாடே இந்தத் தலைமை மாற்றம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, திமுக உடனான கூட்டணியே தொடர வேண்டும் என்பதில் செல்வப்பெருந்தகை மிகவும் பிடிவாதமாக இருந்தார். ஆனால், மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி வைக்க வேண்டும் என்ற டெல்லி மேலிடத்தின் விருப்பத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.
தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்தவுடன், காங்கிரஸ் கட்சி உடனடியாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குத் தனது ஆதரவை வழங்கியது. மேலும் புதிய தவெக அரசில் இரண்டு அமைச்சர் பதவிகளையும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையும் காங்கிரஸ் கேட்டுப் பெற்றது. ஆரம்பம் முதலே தீவிர திமுக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த செல்வப்பெருந்தகை, இந்தத் திடீர் கூட்டணி மாற்றத்திற்குப் பிறகு கட்சிக்குள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற செல்வப்பெருந்தகையின் மகள் திருமண நிகழ்விற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி அல்லது அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் யாரும் நேரில் வரவில்லை. அதே சமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். இதுவே காங்கிரஸ் மேலிடத்திற்கும் செல்வப்பெருந்தகைக்கும் இடையே உள்ள விரிசலை வெளிச்சமிட்டுக் காட்டியது.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த செல்வப்பெருந்தகை, தன்னைத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கடிதம் அளித்திருந்த நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மாணிக்கம் தாகூர் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த அதிரடி மாற்றம் தமிழக காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.