#BREAKING: டெல்லி ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... கட்டுக்குள் கொண்டுவரப் போராடும் தீயணைப்புப் படை!
நாட்டின் தலைநகரான புது தில்லியில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பிரதான கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள ஆர்பிஐ கட்டிடத்தின் மேல் தளத்தில் இன்று மதியம் திடீரென கரும்புகை வெளியேறத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்தவுடன் அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் உதவியுடன் கட்டிடத்தின் மேல் பகுதிக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
முதற்கட்ட தகவலின்படி, மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வங்கி கோப்புகள் மற்றும் கணினி உபகரணங்கள் இருந்த பகுதியில் தீ பரவியுள்ளதால், முக்கிய ஆவணங்கள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. எனினும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும்.
பாதுகாப்பு கருதி அந்தச் சாலையில் போக்குவரத்துத் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.