#BREAKING: வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்... புதுவையில் கூட்டணி அமைத்தது தவெக! 

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று இரவு 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், இன்று மதியம் திடீர் திருப்பமாக 'நேயம் மக்கள் கழகம்' என்ற கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புதுச்சேரியின் வளர்ச்சியை முன்னிறுத்தி, நேயம் மக்கள் கழக நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். த.வெ.க அறிவித்திருந்த 30 தொகுதிகளில் உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய  இரண்டு தொகுதிகள் நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு வெளியான பட்டியலில் உருளையன்பேட்டை தொகுதிக்கு S. மரிய பிரான்சிஸ் என்பவரும், தட்டாஞ்சாவடி தொகுதிக்கு M. பன்னீர்செல்வம் என்பவரும் த.வெ.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போதைய கூட்டணிக் கணக்குப்படி, இந்த இரண்டு இடங்களிலும் நேயம் மக்கள் கழக வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்.

நேரு (எ) குப்புசாமி புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் மற்றும் உருளையன்பேட்டை தொகுதியில் செல்வாக்கு மிக்க மூத்த அரசியல்வாதி ஆவார். இவரது வருகை த.வெ.க-வின் பலத்தை அந்தப் பகுதியில் கணிசமாக உயர்த்தும் எனக் கருதப்படுகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றைய தினமே கடைசி நாள் என்பதால், இந்தத் திடீர் திருப்பம் புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.