#BREAKING: தமிழ்நாடு தலைமைச் செயலர், உளவுப்பிரிவு டிஜிபி ஆகியோர் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாநிலத்தின் மிக முக்கிய அதிகார மையங்களான தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி ஆகியோரை மாற்றி இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்களை உடனடியாக அமலுக்குக் கொண்டு வர வேண்டும் எனத் தமிழக அரசுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிகாரிகள் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். புதிய அதிகாரிகள் பணியில் சேர்ந்தது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையை இன்று மாலைக்குள்ளேயே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் பொதுவாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படும் அல்லது நீண்ட காலம் ஒரே பொறுப்பில் இருக்கும் முக்கிய அதிகாரிகளை மாற்றி, தேர்தல் நடுநிலையாக நடப்பதை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையாகும். அதன் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.

ஏற்கனவே தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மாற்றப்பட்டு புதிய டிஜிபி நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தலைமைச் செயலரும் மாற்றப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.