#BREAKING: தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை... பிலிப்பைன்ஸில் ரிக்டர் 7.8 அளவில் நிலநடுக்கம்!

 

தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 7.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மின்டானோ மாகாணத்தில் உள்ள புரியாஸ் நகருக்கு மேற்கே, இன்று காலை உள்ளூர் நேரப்படி 7:37 மணிக்கு இந்த மாபெரும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கவியல் துறையின் அறிவிப்பின்படி, பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வு மிகவும் கடுமையாக இருந்ததால், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் பயங்கரமாகக் குலுங்கின. பயந்துபோன பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

ரிக்டர் அளவில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால், கடலுக்குள் ராட்சத அலைகள் எழும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி, அதன் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளுக்குச் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் அவசரச் 'சுனாமி எச்சரிக்கை' விடுத்துள்ளன.

கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான மற்றும் உயரமான இடங்களுக்கு இடம்பெயருமாறு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களே ஆகியுள்ளதாலும், தொலைத்தொடர்பு சேவைகள் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாலும், இந்த அசுர நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மீட்புப் படையினர் தற்பொழுது நிலநடுக்கம் பாதித்த மின்டானோ பகுதியை நோக்கி விரைந்துள்ளனர்.

ஏற்கனவே மத்திய கிழக்கு போர் பதற்றம் உலகையே உலுக்கி வரும் நிலையில், தற்போது ஆசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் இயற்கை பேரிடர் மற்றும் சுனாமி அச்சுறுத்தல் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.