BREAKING: புதிய எச்-1பி விசா விண்ணப்பங்கள் ஏற்கப்படாது - வரம்பு எட்டியதாக அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்காவில் அடுத்த நிதியாண்டுக்கான எச்-1பி விசாக்களின் நிர்ணயிக்கப்பட்ட வரம்பு முழுமையாக எட்டப்பட்டதைத் தொடர்ந்து, புதிய விசா விண்ணப்பங்களை ஏற்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் 85,000 விசாக்களுக்கான வரம்பு தற்போது எட்டப்பட்டுள்ளது.
இந்தியத் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வல்லுநர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த எச்-1பி விசாக்களுக்கான தேர்வு முறையில் இந்த ஆண்டு சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன: வழக்கமாகப் பின்பற்றப்படும் கணினி அடிப்படையிலான பாரம்பரியக் குலுக்கல் முறைக்கு மாற்றாக, இந்த முறை விண்ணப்பதாரர்களின் ஊதியம் மற்றும் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுப் பயனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விதிகளின்படி, அதிக ஊதியம் பெறும் உயர் தகுதி வாய்ந்த வல்லுநர்களுக்கே விசாக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமைந்துள்ளன. அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள இந்த விசா விதிமுறை மாற்றங்கள் மற்றும் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, நடப்பு ஆண்டில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 38.5 சதவீதம் சரிவடைந்து, மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 600 ஆகக் குறைந்துள்ளது. விசா நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாகவே, போலி விண்ணப்பங்கள் மற்றும் முறைகேடுகள் பெருமளவு தடுக்கப்பட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.