#BREAKING: தவெக தொண்டர்கள் தள்ளுமுள்ளு... ரோடு ஷோவை ரத்து செய்துவிட்டு கோவை புறப்பட்டார் விஜய்!

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 14, 2026) திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் பெரும் பரபரப்பு நிலவியது. பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரை பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் 'ரோடு ஷோ' கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெருமாநல்லூரில் இன்று பிற்பகலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம், திட்டமிட்ட நேரத்தைக் கடந்து நீண்ட நேரம் நீடித்தது. வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலால் 15-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி விஜய் தனது உரையை முடிக்கவே நீண்ட நேரமானது.

மாலை நேர நெருக்கடி மற்றும் பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலின் பேரில், பூலுவப்பட்டி வரை செல்லவிருந்த வாகனப் பேரணி ரத்து செய்யப்பட்டது. போதிய வெளிச்சம் இன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டதை அடுத்து, விஜய் தனது பரப்புரை வாகனத்திலேயே அங்கிருந்து கிளம்பி சாலை மார்க்கமாகக் கோவைக்குத் திரும்பினார். கோவையில் தங்கியிருக்கும் அவர், அங்கிருந்து அடுத்தகட்டப் பிரச்சாரப் பயணங்களுக்குத் தயாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர்-பூலுவப்பட்டி சாலையில் சாலையின் இருபுறமும் விஜய்யைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் பல மணிநேரமாகக் காத்திருந்தனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் சித்திரை வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்றிருந்தனர். ரோடு ஷோ ரத்து செய்யப்பட்ட தகவல் வெளியானதும் அவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.