#BREAKING: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து - மதுரையில் பரபரப்பு!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த மேல்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்கு மத்தியிலும் இச்சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேல்கோட்டை வாக்குச்சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மாரிமுத்து என்பவருக்கும், பாலமுருகன் என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை மாரிமுத்துவை நோக்கிக் குறிவைத்து வீசியுள்ளார்.
பெண் காயம்: மாரிமுத்து அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பினார். ஆனால், பாலமுருகன் வீசிய கத்தி தவறுதலாக மாரிமுத்துவின் அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரின் காலில் பலமாகப் பாய்ந்தது.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகத் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கத்தியுடன் தப்ப முயன்ற பாலமுருகனை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே நிலவி வந்த தனிப்பட்ட முன்விரோதமே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தேர்தல் நடைபெறும் நாளில், அதுவும் வாக்குச்சாவடிக்கு உள்ளேயே கத்திக்குத்துச் சம்பவம் நடந்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.