#BREAKING:காலையிலே அதிர்ச்சி... உடனடி அமல்... வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு!

 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் சூழல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே எரிவாயு விநியோகத்தில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டு உணவகங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

வணிக சிலிண்டர் விலை உயர்ந்த போதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின்படி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த திடீர் விலை உயர்வு நாடு முழுவதும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்.பி.ஜி சிலிண்டர் விலை 913 ரூபாயில் இருந்து 942 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 29 ரூபாய் உயர்ந்து 957.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் நடுத்தர குடும்பத்து இல்லத்தரசிகள் இந்த கூடுதல் விலை உயர்வால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.